வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி முனீஸ்வரன் கோவில் அருகே தர்மகர்த்தா வட்டம் பகுதியில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.இசைக் கச்சேரி முடிந்து மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பினர். அப்போது அங்கு உள்ள ஒரு வீட்டிலிருந்து, 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வெளியே ஓடி வந்தார். இதை கண்ட பொதுமக்கள் வீடு புகுந்து திருட வந்த நபர் என சந்தேகித்து அவரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
ஏதும், விசாரிக்காமல் அடித்து உதைத்து, கொடூரமாக தாக்கினர். இதில் அவர் சுருண்டு விழுந்து இறந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் பிணத்தை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர்.
தகவலறிந்ததும், ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் விரைந்துச் சென்று கொல்லப்பட்டவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவர், ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி பரிய மால்குடா டாக்டர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த குமாரசாமி மகன் அந்தோஜி வீராச்சாரி (வயது 38) என்பது தெரிய வந்தது. தச்சு வியாபாரியான இவர், கடந்த 12-ந் தேதி வியாபாரம் நிமித்தமாக ஐதராபாத்தில் இருந்து கேரள மாநிலம் செங்கனூருக்கு சென்றார்.
அங்கு வியாபாரத்தை முடித்துவிட்டு, ஐதராபாத் ரெயிலில் புறப்பட்டார். அந்த ரெயில் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டைக்கு வந்தது. அதில் இருந்து இறங்கிய வீராச்சாரி ஊருக்கு செல்லாமல் எதற்காக கட்டேரி பகுதிக்கு சென்றார் என்பது தெரியவில்லை.
இரவு நேரம் அங்கும், இங்குமாக சுற்று திரிந்ததால் சந்தேகப்பட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் திருடன் என சந்தேகப்பட்டுள்ளனர். அதற்கு ஏற்றாற்போல், ஒரு வீட்டிற்குள் நுழைய முயன்று பிறகு வெளியே ஓடி வந்தார். இதையடுத்து தான் அப்பகுதி இளைஞர்கள் தாக்கினர். இதில் வீராச்சாரி இறந்து விட்டார்.
இச்சம்பவம் குறித்து 9 வாலிபர்கள் மீது வழக்குப் பதிந்த போலீசார், கொலை தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த தீர்த்தகிரி மகன் கண்ணதாசன் (வயது 21) என்ற ஒரு வாலிபரை மட்டும் முதலில் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை பிடிக்கவும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், கொலை தொடர்பாக போலீசார், தர்மகர்த்தா வட்டம் பகுதியில் வசிக்கும் ஆண்கள், பெண்கள் என அனைவரையும் விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்வதாக பரபரப்பு புகார் கூறப்படுகிறது. கொலை வழக்கில் போலீசார் தங்களையும் குற்றவாளிகளாக சேர்த்துவிடுவார்கள் என்ற பயத்தில் அந்த பகுதியில் உள்ள அனைவரும் தங்கள் வீடுகளை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுவிட்டனர்.
இதனால் ஊரே காலியாக வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்த நிலையில் பொது மக்கள் சந்தேகித்தது போல் வீராச்சாரி வீடு புகுந்து திருட முயற்சி செய்தாரா? அல்லது யாரையாவது சந்திக்க வந்தாரா? என்பது குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும்.
கொலை தொடர்பாக, விசாரணை என்ற பெயரில் பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது. பெண்கள், குழந்தைகளை நிம்மதியாக வசிக்கவிட வேண்டும் என்று அந்த கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.